தேவனிடம் பதில் கிடைக்குமா?
எம் தேவனிடம் நாம் கேட்கும் காரியங்களை அவர் எமக்குத் தந்தருளுவார்
என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. ஏனெனில் பிதாவின் நாமம் மகிமைப்படும் படியாக நாங்கள்
இயேசுக்கிறிஸ்துவின் மூலமாக கேட்கின்ற காரியங்களை அவர் எமக்குத் தந்தருளுவார். வேதாகமம்
அதை தெளிவாகக் கூறுகின்றது. கிறிஸ்து நாம் தேவையானது என எண்ணுபவற்றை எமக்கு ஏற்கனவே
தருவதற்கு வல்லமையுடையவர். நாம் எண்ணுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அவர் எங்களுடைய
தேவைகளை சந்திக்க வல்லவராயிருக்கின்றார்.
ஆயினும் நாம் சிலவேளைகளில் கேட்கின்ற காரியங்களுக்கான செயல்களை அல்லது
பதில்களை நாம் பெற்றுக்கொள்ளாது விடுகின்றோம். அதற்கு பல காரணங்கள் காணப்படுகின்றது.
அக்காரணங்களில் ஒருசிலவற்றை கீழுள்ளவாறு விளங்கிக்கொள்ளத்தக்க விதத்தில் காணலாம்.
1 தொடர்ச்சியான ஜெபம் இல்லாமை
ஒரு நியாயாதிபதியிடம் ஒரு விதவை தனக்கு நியாயம் கோரி விண்ணப்பித்தாள்.
அந்த நியாயாதிபதிக்கோ அவளுடைய விண்ணப்பத்திற்குரிய காரியங்களை செய்வதற்கு விருப்பமில்லாதவனாய்
அக்காரியங்களைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தான். ஆயினும் அந்த ஏழை விதவையானவள் தொடர்ந்து
அவனிடம் அக்காரியத்தை நியாயம் விசாரிக்கும்படி தினமும் வற்புறுத்தி வந்ததால் ஒருநாள்
அவனும் அக்காரியத்தை நியாயம் விசாரித்ததோடு அவ்விதவைக்கு சரியான நஷ்டபெறுமதி சேரவேண்டும்
எனவும் உத்தரவிட்டு அவ்விதவையின் விண்ணப்பத்தை கேட்டருளினான். அவ்வாறாக அவ்விதவையினுடைய
துயரங்கள் நீக்கப்பட்டது.
இவ்விதமாக இறைவனும் எங்களுடைய பிரச்சினைகளை கேட்பது அவருடைய சித்தமாயிருக்கின்றது.
எனினும் இவ்வாறான ஒரு நிலையை நாம் அறிந்திருப்போமானால் தொடர்ந்து எம் பிரச்சினைகளை
இறைவனுடைய பாதங்களுக்கு கொண்டு செல்லுவோம். உண்மையில் எங்களுடைய பிரச்சினைகளை குறித்து
எவ்விதமான பாரத்தோடு நாம் ஜெபிக்கின்றோமோ அவ்வதமாகவே இறைவனது பதிலும் அமைந்திருக்கும்.
ஆகவே எங்களது ஜெபமானது இறைவணன்டை கொண்டு செல்லப்பட்டாலும் நாம் தொடர்ச்சியாக அதைக்குறித்து
ஜெபிக்காத போது சிலவேளைகளில் அதற்குரிய பலனை பெற்றுக்கொள்ள அதிக நாட்கள் எடுக்கவும்
கூடும். தொடர்ந்தேர்ச்சியாக இடைவிடாது ஜெபிக்கும் போது உத்தரவானது விரைவாக வருகின்றது.
அதனால் தான் இயேசுவும் இடைவிடாமல் ஜெபியுங்கள் எனக் கூறியுள்ளார் என விளங்கிக் கொள்ள
முடிகின்றது.
2 இறைவன் பதில்கொடுத்தார்.
ஆயினும் சாத்தான் அப்பதிலை பெறாது தடைசெய்கின்றான்.
தானியேல் என்னும் மனிதன் தன்னுடைய விண்ணப்பத்தை தேவனிடம் ஏறெடுத்து
பல நாட்களாக அதற்குரிய பதிலை எதிர்பார்த்தும் பெற்றுக்கொள்ளவில்லை. பதிலை பெற்றுக்கொள்ள
மூன்று கிழமைகள் எடுத்தது. அன்று தேவனுடைய தூதன் பதிலோடு கூறிய காரியத்தை காணலாம்.
அப்பதிலை கொண்டுவரும் தேவனுடைய தூதனை தேவனுக்கு எதிராக கிரியை செய்யும் சாத்தானின்
தூதர்களில் ஒருவன் இருபத்தொரு நாட்களாக தடுத்து நிறுத்தியிருந்ததாக தேவதூதனால் தானியேலுக்கு
அறிவிக்கப்படுகின்றது.
ஆகவே தேவனால் அனுப்பப்பட்ட பதிலானது சாத்தானால் தடுக்கப்படுவதின்
காரணமாக எமது விண்ணப்பத்திற்கான பதில் கிடைக்க தாமதமாகின்றது. நாம் ஜெபித்த காரியங்களை
குறித்து அறிந்த இறைவன் அதற்கான பதிலை எமக்கு கொடுக்கின்றார். அவர் சீக்கிரமே அதற்கான
பதிலை எமக்கு கொடுக்கின்றார். ஆயினும் அப்பதிலை நாம் பெற்றுக்கொள்ள தாமதமாகின்றது.
இதற்கு காரணமாக சாத்தானுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றது. இதற்கு நாம் செய்யவேண்டியது
சாத்தானை எதிர்த்து போரிட வேண்டியதாகும். சாத்தானுக்கு பயப்படவேண்டிய அவசியம் தேவையில்லை.
ஏனெனில் இயேசுவானவர் தமது சிலுவையில் சாத்தானுக்கு தோல்வியை ஏற்படுத்தி விட்டார். நாம்
சாத்தானை தோல்விக்குள்ளாக முடியும். அவ்விதம் செய்யும் போது தேவனுடைய பதில் சீக்கிரம்
கிடைக்கும் எனலாம்.
3 சரியான ஆயத்தமும் அர்ப்பணிப்பும்
விசுவாசமும் அவசியம்
ஆதாமின் குமாரர்கள் இருவர் தேவனுக்கு காணிக்கை செலுத்த சென்றனர்.
ஒருவன் ஆயத்தத்தோடு சென்றான். இன்னொருவன் சரியான ஆயத்தமில்லாது சென்றான். இருவரும்
பலியிட்டனர். ஆயத்தத்தோடு சென்றவனின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவனின் பலி ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இங்கு இவர்களுடைய பலியை பற்றி வேதாகமம் கூறும்போது ஒருவன் தன்னுடைய விளைச்சலின் சிறு
பகுதியை அளிக்கின்றான். மற்றவன் தன்னுடைய மந்தையில் தெரிவுசெய்து, கொழுமையானதை கண்டு,
தலையீற்றை கண்டு முதன்மையானதை காணிக்கையாய் செலுத்துகின்றான்.
எமது விண்ணப்பங்களும் தேவனுக்கு பிரியமான பலியாக இருக்க வேண்டும்.
தேவனுடைய சித்தத்திற்கு ஏற்ற வண்ணம் எங்களது ஜெபங்கள் காணப்படுமாயின் தேவன் அதற்கு
பதிலளிக்க ஆயத்தமுள்ளவராயிருக்கின்றார். மேலோட்டமாக அரையும் குறையுமாக ஜெபிப்பதை விட்டு
பயபக்தியுடன், ஆழ்ந்த ஞானத்துடன், உள்ளான இருதயத்துடன், பூரண விசுவாசத்துடன், அர்ப்பணிப்புடன்
வேண்டுதல் செய்யும் போது அதற்கான பதிலை நிச்சயம் பெற்றுக்கொள்ள முடிகின்றது.
சங்கீதம் 22:11
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும்,
நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?


Syndication
No Comment for this post yet...