விண்ணப்பத்தின் பலன்
எங்களுடைய விண்ணப்பங்களின் சத்தம்
எப்போதும் தேவணன்டைக்கு சென்று கொண்டேயிருக்கின்றது. ஏனெனில் தேவன் எப்போதும் எங்கள்
விண்ணப்பங்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்;றார். நாம் வேண்டுவதற்கு முன்னமேயே அவர் எங்கள்
விண்ணப்பங்களை அறிந்திருக்கின்றவராயிருக்கின்றார். அவர் எங்களை ஒரு போதும் கைவிடப்
போவதில்லை என்பது அவருடைய வாக்காயிருக்கின்றது. அதனாலே தான் நாம் எங்கள் தேவனாகிய கர்த்தரை
நோக்கிப் பார்க்கின்ற போதெல்லாம் அவர் எங்களுக்காக நெருங்கி வருகின்றார். எவ்விதமெனில்
அவருடைய நாமத்தை நாம் தொழுது கொள்ளும் எல்லா நேரங்களிலும் எங்கள் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்கும் நேசராக அவர் இருக்கின்றார்.
உலகத்தின் ஏனைய விடயங்களைவிட தேவனுடைய சமூகமானது எவ்வளவு ஆனந்தமாயிருக்கின்றது என ஒவ்வொரு
தேவனுடைய பிள்ளைகளாலும் கூறமுடிகின்றதற்கு காரணமாயிருப்பது அதுவே. அவருடைய அநாதி தீர்மானத்தின்
பிரகாரம் எங்கள் மத்தியில் தேவன் அசைவாடுகின்றார். அவருடைய கிருபையானது எங்களுக்குள்ளாக
காணப்படுவதினால் நாம் எங்கள் தொழுகைக்கு ஏற்ற பதிலைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக அமைகின்றது.
ஆயிரம் நாட்கள் உலகத்தில் வாழ்வதை விட தேவனுடன் செலவழிக்கின்ற ஒரே நாள் மேலானது என
தாவீதரசன் கூறியது எத்தனை உண்மை. ஏனெனில் எங்களுடைய விண்ணப்பங்களை கேட்கும் தேவனானவர் அதற்குத்தகுந்த பதிலை செய்யக்கூடியவர். தேவனுடைய வார்த்தையானது யுத்தம் கர்த்தருடையது எனக்கூறுவது போல எமது எல்லாவித செயல்களாலான காரியங்களுக்கும் தேவனுடைய பலத்த கரமானது எங்களுக்காய் போராடுகின்றது. நாம் பதிலை பெற்றுக்கொள்வது மாத்திரமல்ல. தேவனுடைய கரத்தின் வலிமையை அறிந்து கொள்ளுகின்றோம்.
தேவனுடைய செயற்பாடானது நாம் அவருடன் நெருங்கி ஜீவிக்க வழிவகைகளை ஏற்படுத்துகின்றது. அவர் நன்மைசெய்கின்ற போது இன்னுமதிகமாக தேவனுடைய பிரசன்னத்தை நாடவேண்டிய பொறுப்பும் எமக்கு உண்டாகின்றது. தேவன் எப்போதும் நன்மைசெய்கின்றவராகவே இருக்கின்றார் என அவருடைய வேதாகமம் எமக்கு கற்றுத் தருகின்றது. ஆகவே நன்மைசெய்கின்றவரான தேவன் எமக்காக போரிடும் போது நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. நாம் உண்மையாக தேவனண்டையில் தொழுதுகொள்ளும் போதெல்லாம் நிச்சயம் அவர் எம்மருகில் இருக்கின்றார் என்பது ஆச்சரியமானது. எனினும் அவரது கிருபையின் நிமித்தமாக நாம் இன்னும் ஜீவிக்கின்றோம். ஏனெனில் எப்போது நாம் தொழுதுகொள்ள விரும்புகின்றோமோ அப்போதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கின்றார். ஒருபோதும் எம்மைவிட்டு விலகாதவராக எம்தேவன் இருக்கின்றார். நாம் அதைரியப்பட்டு போகையில் அநேகமாக தேவனை மறந்துவிடுகின்றோம். அல்லது தேவன் எம்மை கைவிட்டார் என்கின்றோம். எது எவ்வாறாயினும் அந்நேரம் நாம் கடவுளை நோக்கி பார்ப்போமாயின் அவரது சத்தத்தை நாம் கேட்கமுடியும். எமது சத்தத்தை அவர் கேட்பார். அவருடைய கை உதவி செய்வதற்கு குறுகிப் போய்விடவில்லை. ஆகவே எங்களுக்கு நன்மை செய்யும்படியாக அவர் எங்களுடன் கூட இருக்கின்றார் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை.
உபாகமம் 4:7
நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?


Syndication
No Comment for this post yet...